“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா KS !! –
“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா KS !! –
வெற்றிமாறன் & மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க ஆசை - நடிகை ஐஸ்வர்யா KS !!
நயன்தாரா தான் என் இன்ஸ்பிரேஷன் - நடிகை ஐஸ்வர்யா KS!!
நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில், கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சிறுவயது முதலே நடனம் கற்றுக் கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா KS, விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்தவர். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்த அவர், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ளார். இந்த விளையாட்டு பின்னணியே, அவரது திரை நடிப்பில் காணப்படும் தன்னம்பிக்கை மற்றும் உறுதியான உடல் மொழிக்கு காரணமாக அமைந்துள்ளது.
கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த அனுபவம், நடிப்பை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளின் மூலம், இன்று அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
தற்போதைய தமிழ்ப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் நட்டி நட்ராஜ் ஜோடியாக ஒரு புதிய தமிழ் படத்தில் ஐஸ்வர்யா KS நடித்து வருகிறார். இதோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது திரையுலகப் பயணம் குறித்து பேசும் ஐஸ்வர்யா KS..,
“சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவர் தன் உழைப்பால் உயர்ந்ததை பார்த்து வளர்ந்தேன். நான் நடிக்க வந்த போது, ஆரம்பகால நயன்தாராவைப் போல இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் போல உழைத்து வளர வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார்.
மேலும், இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்கள் தன்னை பெரிதும் ஈர்த்துள்ளதாக கூறிய அவர்,
“அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதே நேரத்தில், புதுப்புது கதைகளோடு வரும் இளம் இயக்குநர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைச் செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ மூலம் கிடைத்த அங்கீகாரம், நடிகை ஐஸ்வர்யாவின் திரையுலகப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது. கடின உழைப்பு, தெளிவான கனவுகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சி – இவை அனைத்தும், அவரை அடுத்த கட்ட உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.









Comments
Post a Comment