சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட ‘சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்’ உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவு
சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட ‘சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்’
உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவு
சென்னை, தமிழ்நாடு | 24 ஆகஸ்ட் 2026
சென்னை மணலியில் 15 ஏக்கர் பரப்பளவில், சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ள ‘சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்’ (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளித்து வருகிறது.
இந்தக் கூட்டுமுயற்சி, பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 2 (மணலி மண்டலம்) மற்றும் ‘ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ்’ (Farmers for Forests) என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இந்த மையம், உள்ளூர் சமூகத்தினர் சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மை குறித்து அறிந்துகொள்ளவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவும் உதவும்.
இந்தியாவில் அக்சென்ச்சர் மற்றும் ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ் இணைந்து ஆதரிக்கும் மூன்றாவது சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் இதுவாகும். இதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள மஞ்சாரில் 12 ஏக்கர் பரப்பளவிலும், கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள நிருத்யாகிராமில் 10 ஏக்கர் பரப்பளவிலும் இதுபோன்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று மையங்களும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை நேரடி சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்புடன் இணைக்கின்றன.
சதுப்புநில மறுசீரமைப்பு
சென்னையில் மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சி, மாசடைந்த தொழிற்பேட்டை நிலப்பரப்பை, வாழ்விட மறுஉருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் புனரமைக்கப்பட்ட சதுப்புநிலச் சூழலியல் மண்டலமாக மாற்ற உதவியுள்ளது.
சுற்றுச்சூழல் தாங்குதிறனை அதிகரிக்கவும், வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியில் குளங்கள், ஆழமான நீர்நிலைப் பகுதிகள், உபரி நீர் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் பல்வேறு வாழ்விட மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டின் இறுதிக்குள், இப்பகுதி 19,000-க்கும் மேற்பட்ட பூர்வீக மரங்கள் மற்றும் புதர்களின் தாயகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பறவைகள், மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் சதுப்புநிலத்தைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்களுக்கான வளமான பல்லுயிர்ச் சூழல் உருவாகும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சமூகப் பங்கேற்பு
இந்த மையத்தில் உள்ளூர் சமூகத்தினர் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக வழிகாட்டிகளுடன் கூடிய இயற்கைச் சுற்றுலா, பறவைகள் கண்காணிப்பு, நீடிப்புத்தன்மை குறித்த பயிலரங்குகள் மற்றும் நேரடி செயல்விளக்கங்கள் நடத்தப்படும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வட்டப் பொருளாதார நடைமுறைகள், கழிவு மேலாண்மை, நீடித்த உணவு முறைகள் மற்றும் நீடிப்புத்தன்மையுள்ள வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செயல்விளக்கங்கள் வழங்கப்படும்.
மேலும், பார்வையாளர்கள் மரம் நடுதல், பல்லுயிர்ப்பெருக்கக் கண்காணிப்பு, எரு உரம் தயாரித்தல், பெர்மாகல்ச்சர் தோட்டம் அமைத்தல், பூர்வீக நாணல் புற்களை நடுதல், ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றுதல் மற்றும் உள்ளூர் விலங்கினங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்குதல் போன்ற சதுப்புநில மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்கலாம்.
சூரிய மின்சக்தியால் இயங்கும் இந்த மையத்தில், மழைநீர் சேகரிப்பு மற்றும் மண் பாதுகாப்பு நுட்பங்களும் இடம்பெறும்.
ஏற்கனவே உள்ள மையங்களின் வெற்றி
சென்னையில் அமைக்கப்படும் இந்த மையம், இந்தியாவில் அக்சென்ச்சர் ஆதரவளிக்கும் ஏற்கனவே உள்ள இரண்டு சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையங்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், மஞ்சார் (புனே மாவட்டம்) மற்றும் நிருத்யாகிராம் (பெங்களூரு) மையங்களை 30,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இவர்களில் 15,000-க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவர்கள், உள்ளூர் சமூக உறுப்பினர்கள் மற்றும் அக்சென்ச்சர் ஊழியர்கள் ஆவர்.
மஞ்சார் மற்றும் பெங்களூரு மையங்கள் இணைந்து 27,000-க்கும் மேற்பட்ட மரங்களையும், 200-க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்களையும் உள்ளடக்கிய வளமான இயற்கைச் சூழலை உருவாக்கியுள்ளன.
மேற்கோள்கள்
இந்தியாவில் உள்ள அக்சென்ச்சரின் சீனியர் கண்ட்ரி மேனேஜிங் டைரக்டர் அஜய் விஜ் கூறுகையில்:
“அக்சென்ச்சரில், பொறுப்பு மேலாண்மை என்பது நமது மக்கள், சமூகங்கள் மற்றும் பூமியின் மீதான நமது கடமையில் வேரூன்றியுள்ளது. கல்வியும் பங்களிப்பும் விழிப்புணர்வைச் செயல்பாடாக மாற்ற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்கள் நீடிப்புத்தன்மையை நேரடியாக அனுபவித்து உணர உதவுவதன் மூலம், சிறந்த புரிதலை உருவாக்கவும், அடுத்த தலைமுறையினரை சுற்றுச்சூழல் பொறுப்பை ஏற்க ஊக்குவிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”
அக்சென்ச்சரின் கார்ப்பரேட் சிட்டிசன்ஷிப் – ஆசிய பசிபிக் லீட் மனிஷா பட்டாச்சார்யா கூறுகையில்:
“புனே மாவட்டத்தின் மஞ்சார் மற்றும் பெங்களூருவின் நிருத்யாகிராமில் இருந்து சென்னையின் புதிய சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் வரை, இந்த இடங்கள் அந்தந்த சமூகங்களின் சுற்றுச்சூழல் முன்னுரிமைகளில் வேரூன்றி, நீடிப்புத்தன்மையை உணரக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுகின்றன. உள்ளூர் சமூகங்கள் இந்த மையங்களில் இருந்து கற்றுக்கொள்வது போலவே, பல்லுயிர்ப்பெருக்கக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அவற்றுக்குப் பங்களிக்கவும் செய்கின்றன. இது காலப்போக்கில் இந்த இடங்கள் வளர்ச்சியடையவும் செழிக்கவும் உதவுகிறது.”
Comments
Post a Comment